Friday, November 24, 2017

கணபதி இருக்க கவலை எதற்கு .....


ஸ்ரீமுத்து கணபதி, ஆவுடையார் கோவில்.

ஒரே கோயிலில் பல பிள்ளையார் மூர்த்திகள் இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியின் அனுகிரக சக்திகள் முற்றிலும் மாறுபடும் என்பதற்கு ஆவுடையார் கோவில் திருத்தலமும் ஒரு உதாரணம் ஆகும்.

தந்தை வழியிலும் தாய் வழியிலும் மொத்தம் 12 தலை முறையினருக்கு தர்ப்பணம் அளித்தலே சிறபபாகும். ஆனால், இவ்வாறு தங்கள் சந்ததியிலுள்ள மூதாதையர்களின் பெயர்கள் அநேகமாக பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அத்தகையோர் தங்கள் வம்சாவழியினரின் பெயர்களை அறிய உதவுபவரே ஸ்ரீமுத்துப் பிள்ளையார் ஆவார். மார்கழி மாதத்தில் பனி முத்துக்கள் மறையும் முன் சேகரித்த அருகம்புல் மாலைகள் இவருக்கு ப்ரீதி.


ஸ்ரீகணேச மூர்த்தி, இடையாற்றுமங்கலம், லால்குடி.

ஸ்ரீகணேச மூர்த்திக்கு வலப்புறம் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி எழுந்தருளி உள்ள திருத்தலமே இடையாற்று மங்கலமாகும்.
எத்தகைய கொடிய திருமண தோஷங்களையும் தீர்க்கக் கூடியதே இத்தகைய ரிஷி வல சக்திகளாகும். வலஞ்சுழி விநாயகரைப் போல இவ்வாறு ரிஷிகள் பிள்ளையாரின் வலப் புறத்தில் எழுந்தருளி இருப்பதையே ரிஷி வல மாங்கல்ய சக்திகள் என்று சித்தர்கள் புகழ்ந்து கூறுகிறார்கள்.
ஒரே ரக மாங்கனிகளால் இத்தல விநாயகருக்கு மாலை அணிவித்து வழிபடுதல் ரிஷி வல சக்திகளைப் பெறும் எளிய முறையாகும்.


பஞ்ச பிள்ளையார் மூரத்திகள், திருப்புனவாசல்

சூன்ய திதி, கூடா நாட்கள், சந்திராஷ்டமம் போன்ற தோஷமுள்ள நாட்களில் திருமணம் புரிந்து கொண்டவர்கள் இத்தல பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி ஒன்பது கஜ நூல் புடைவைகளையும் ரவிக்கைகளையும் சுமங்கலிகளுக்குத் தானம் அளித்து வந்தால் கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படாது.


ஸ்ரீ கணபதி மூர்த்தி, திருமணமேடு, லால்குடி. 

திருமணமானபின் தம்பதிகள் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களுள் ஸ்ரீதர்மவர்த்தினி உடனுறை பஞ்சநதீஸ்வரர் திருத்தலமான திருமணமேடும் ஒன்றாகும். உத்தம குழந்தைகளைப் பெற விரும்பும் பெற்றோர்கள் வழிபட வேண்டிய தலம்.


ஸ்ரீகணபதி மூர்த்தி, அண்டமி திருத்தலம்.

சிலருக்கு சளியுடன் இரத்தம் வெளியேறும் நோய் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் இதற்கான காரணங்களை மருத்துவர்களாலும் உறுதியாகச் சொல்ல முடியாது.
இவ்வாறு நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அண்டமி கணபதி மூர்த்தியை வணங்கி பூரண கொழுக்கட்டைகளை தானம் அளித்து வந்தால் காரணம் தெரியாத நோய்களிலிருந்து நிவாரணம் கிடடும்.


ஸ்ரீகணேச மூர்த்தி, நகர் சிவத்தலம், லால்குடி.

இப்பூவுலகில் முதல் சந்தனக் காப்பு வளர்பிறை சதுர்த்தி திதியில் இம்மூர்த்திக்கே நிறைவேற்றப்பட்டது. அப்படியானால் இந்த பிள்ளையார் மூர்த்தியின் காலம் கடந்த மகிமையை என்னவென்று சொல்வது ?
எனவே புது முயற்சிகள் வெற்றி பெற வளர்பிறை சதுர்த்தி திதிகளில் தாமே அரைத்த சந்தனக் காப்புடன் இவரை வழிபடுவது நலம்.


ஸ்ரீ கன்னி மூலை கணபதி, ராச்சாண்டார் திருமலை, திருச்சி.

பெண் குழந்தைகள் பருவம் அடையும் முன்பே பல உடல் கூறு சம்பந்தமான பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிய விதி சிலருக்கு ஏற்படலாம். அத்தகைய வேதனைகள் வாழ்க்கையில் தொடரும்போது இந்த கணபதி மூர்த்தியை வேண்டி கொத்துக் கடலை சுண்டல் ஒரு படி செய்து தானம் அளித்து வந்தால் வாழ்வில் பிடிப்பு ஏற்படும்.


ஸ்ரீகன்னி மூலை கணபதி, பின்னவாசல், லால்குடி.

ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் பிரகஸ்பதி இருந்தால் அத்தகைய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என்ற ஒரு கருத்து மக்களிடையே நிலவுகிறது. இதற்கு பின்னால் ஜோதிட விளக்கங்கள் உண்டு.
ஆனால், அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட ஒன்பதாம் இடத்தில் குரு ஜாதக அம்சம் உள்ள பெண்கள் பின்னவாசல் கன்னி மூலை கணபதியை வணங்கி பஞ்சு திரி தீபங்கள் குறைந்தது ஒன்பது ஏற்றி வழிபடுவதால் நலமடைவர்.


ஸ்ரீகன்னி மூலை கணபதி, திருவாசி.

வாக்கு, பேச்சு சம்பந்தமான குறைபாடுகளைக் களைவதே திருவாசி திருத்தலமாகும். திக்கு வாய்க் குழந்தைகளுக்கு, பேச்சு சரிவராத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் களைய இங்குள்ள பேச்சி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் நிறைவேற்றி வருதல் நலம். தாமே அரைத்த மஞ்சள் பொடியால் கன்னி மூலை கணபதிக்கு அபிஷேகம் இயற்றி சாமந்திப் பூ மாலை அணிவித்து வியாழக் கிழமைகளில் வழிபட்டு வந்தால் உடலில் தோல் நோய்களின் காரணத்தால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும்.
கரடி சித்தர் தினமும் இங்குள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகையைத் தொழுது பெண்களுக்கு வரும் நோய்கள் நிவாரணம் பெறுவதற்காக பிரார்த்தித்து வருகிறார் என்று சித்தர்கள் அருளியுள்ளார்கள். பாக்கியம் உள்ளவர்களுக்கு கரடி சித்தரின் தரிசனம் ஏதாவது உருவில் கிட்டும்.


ஸ்ரீவிநாயக மூர்த்தி, திருத்தியமலை சிவத்தலம். 

பொதுவாக நாக பிரதிஷ்டையுடன் விளங்கும் கணபதி மூர்த்தியை வழிபடுவதால் நுண்ணிய அறிவு விருத்தியாகும். ஜாதகங்களில் ஐந்தாம் இடங்கள் பாவிகளின் சம்பந்தம் பெறும்போது புத்தி சரவர வேலை செய்யாது. இத்தகையோர் இக்கணபதி மூர்த்தியை வணங்கி பழங்கள், பழச்சாறுகளை தானம் அளித்தல் நலம். செயற்கை பழரசங்களைத் தவிர்க்கவும்.


ஸ்ரீபிரளயம்காத்த விநாயகர், திருப்புறம்பியம் சிவத்தலம், கும்பகோணம்.

ஒவ்வொரு யுக முடிவில்தான் பிரளயம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட ஒருவருடைய சொந்த பந்தங்கள், உடமைகள் அவரை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டால் அதுவும் ஒருவகையில் பிரளயம்தானே.
எனவே மனதால் உடலால் தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ளும்போது இம்மூர்த்தியை வணங்கி ஏழைகளுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானம் அளித்து வந்தால் எத்தகைய உடல் மன வேதனைகளையும் எதிர்கொள்ளும் மனோ திடம் வந்தமையும்.


ஸ்ரீவிநாயகர் வீரசிங்கம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம்.

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஔவையார் அருளிய “சீதக் களப ... “ என்று தொடங்கும் விநாயக துதியை ஓதி ஹோமம் வளர்த்து வந்தால்தான் உடல் ஆரோக்யமாகத் திகழ்வதுடன் எதிர்வரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்.
பலரும் மறந்து விட்ட இத்தகைய ஹோம வழிபாட்டை இயற்றிய பலன்களை அளிக்கக் கூடியவரே ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருத்தலத்தில் அருள்புரியும் விநாயக மூர்த்தி ஆவார்.
அவரவர் தங்கள் பிறந்த நாள் அன்று இந்த விநாயக மூர்த்திக்கு 108 நீர்க் கொழுக்கட்டைகளைப் படைத்து தானம் அளித்தலால் அற்புத பலன்களைப் பெறலாம்.


ஸ்ரீசெல்வவிநாயகர், திருவரங்குளம் சிவத்தலம், புதுக்கோட்டை.

திருவரங்குள தெப்பக்குள கரையில் அமர்ந்து அருள்புரியும் அண்ணலே செல்வ விநாயகர் ஆவார். சுத்தமான பஞ்சில் மஞ்சள் தோய்த்து ஒன்பது மாலைகளை இந்த விநாயக மூர்த்திக்கு அணிவித்து வணங்கி வந்தால் எத்தகைய செவ்வாய் தோஷங்களையும் நிவர்த்தி செய்து மண வாழ்க்கையில ஏறப்டும் சச்சரவுகளை தீர்த்து வைப்பார்.
பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவன்மார்களை பல ஆயுதங்களாலும் வார்த்தைகளாலும் தாக்கி துன்பங்களை ஏற்படுத்துவதுண்டு. கணவன்மார்களால் வெளியில் சொல்ல முடியாத இத்தகைய பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு அளிப்பவரே இந்தக் கருணை மூர்த்தி.


சிவலிங்க மூர்த்தியுடன் அருள் புரியும் அபூர்வமான பிள்ளையார் மூர்த்தி, திருவரங்குளம் சிவத்தலம், புதுக்கோட்டை. 

இவ்வாறு தந்தையும் தனயனும் சேர்ந்து அருள்பாலிக்கும் சிவத்தலங்கள் ஞானத் திருத்தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன. 
ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தலத்தில் அடிபிரதட்சிணம் வந்து குங்குமப்பூ கலந்த பசும் பாலை தானமாக அளித்து வந்தால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் உன்னத நிலை அடைவர். ஆளுமை திறன் பெருகும்.


ஸ்ரீகணேச மூர்த்தி, செட்டிக்குளம் சிவாலயம்.

பொதுவாக, ஜாதகங்களில் லக்னங்களில் ராகு, கேது மூர்த்திகள் எழுந்தருளி இருந்தால் அத்தகையோர் தங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
சதுர்த்தி, சதுர்த்தசி திதி நாட்களில் இம்மூர்த்தியை வணங்கி 108 பூரண கொழுக்கட்டைகளைப் படைத்து தானமளித்தலால் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.
இவ்வித துன்பங்கள் மக்களைச் சேரா வண்ணம் காக்க நம் குருமங்கள கந்தர்வா நீல வேணு கந்தம் என்ற அற்புத சூட்சும சக்கரத்தை இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
ஸ்ரீகணபதி மூர்த்தி, ஆச்சாள்புரம்.

ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன் பத்தினி நற்பவி தேவியுடன் வழிபட்டு உன்னத நிலைகளை அடைந்த திருத்தலம். செவ்வாய்க் கிழமைகளில் இத்தலத்தில் நற்பவி தேவியை தியானிப்பதும் இல்லங்களில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு “நற்பவி, நற்பவி“ என்று 108 முறைக்குக் குறையாமல் ஓதி வருதலால் எத்தகைய கொடிய நோய்களும் விலகும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். குழந்தைகள் ஒழுக்கத்துடன் திகழ்வர்.
ஸ்ரீகணபதி மூர்த்தி, ஆச்சாள்புரம்.

காமதேனுவின் புதல்வி பட்டி, பட்டியின் புதல்வி ஆச்சா. காமதேனு, பட்டி, ஆச்சா என்ற மூன்று கோமாதா தேவிகளும் ஒருங்கே தரிசனம் செய்த தலமே சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் திருத்தலமாகும். இவ்வாறு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பசு கன்றுகளுடன் இத்திருக்கோயிலை வலம் வந்து கோபூசை நிறைவேற்றி வழிபடுவதால் தலைமுறை தலைமுறையாக வாட்டும் பித்ரு தோஷங்கள் விலகி குடும்பத்தில் செல்வமும் அமைதியும் பெருகும்.
ஸ்ரீநஞ்சுண்ட விநாயகர், காருகுடி.

சுவாதி நட்சத்திர தினங்களில் 108 பசு நெய் தீபங்களை காருகுடி திருத்தலத்தில் ஏற்றி வழிபடுதலால் காவல்துறை, நீதி துறையில் இருப்பவர்கள் நலம் பெறுவார்கள். கண்களை மூடிக் கொண்டு நிற்கும் நீதி தேவதை இத்திருத்தலம் ஒன்றில்தான் கண்களைத் திறந்த நிலையில் அருளாட்சி புரிகிறது என்பது சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக பொக்கிஷங்களை தக்க பெரியோர்களை நாடி அறிந்து கொள்ளவும்.

சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த ஸ்வாமிகளின் ஆன்மிக பொக்கிஷங்களில் இருந்து ஒரு சில துளிகள்


... மிக்க நன்றி: "குழலுறவு தியாகி" வலைத்தளம்