Saturday, October 6, 2012

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது ...

...
தலையாய சித்தர் அகத்தியரின் அருள் வாக்கையும் அதன் தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது சில வேளை கடினமாக இருக்கும்.

ஒரு சிலர் விஷயத்தில் முன் அறிவிப்பாக எடுத்து சொல்லியும் திருந்தாத அல்லது திருந்த விரும்பாத மனிதர்கள், வாழ்க்கையை அல்லது உயிரை இழந்து நின்ற தருணங்கள் உண்டு.

அப்படித்தான், ஒருநாள்..........

இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். அன்று வந்தவர்களுக்கு நாடி படித்து முடிக்கும் போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது. மிகவும் அசதியாக இருந்ததால், இனி நாடி வாசிக்க இருந்தவர்களை மறுநாள் காலை வர சொல்லிவிட்டு, நாடியை மூடி பூசை அறையில் வைத்துவிட்டு இரவு போஜனத்துக்கு சென்றேன். சாப்பிட தொடங்கும் முன் ஒருமுறை அகத்தியரை மனதார நினைத்துவிட்டு சாப்பாட்டில் கை வைக்க, யாரோ மிக அருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் காதுக்குள் "சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு, நாடியை படி" என்று உத்தரவு கொடுத்ததுபோல் கேட்டது.

இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லையே, இன்று மட்டும் ஏன் இப்படி? என்று திகைத்துப்போய் கேட்டு விட்டு வேகமாக சாப்பாட்டை முடித்து, கை கால் முகம் சுத்தம் செய்து பூசை அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு நாடியை எடுத்து படித்தேன்.

அதில் வந்த செய்திகள் அதிர வைத்தது. ஒரு குறிப்பிட்ட பெறும் புள்ளியின் பெயரை சொல்லிவிட்டு,

"இன்று இரவு ரகசியமாக கங்கை கரையில் ஒரு யாகம் நடத்தப் போகிறார்கள். இந்த யாகம், அதர்வண வேதத்தை பயிற்சி செய்யும் ஒரு சிலரின் துர் போதனையால் ஒருவரின் ஆயுளுக்கு பங்கம் இருக்கிறது என்று, ஆயுளை நீட்டி அவர் உயிரை காப்பாற்ற வேண்டி செய்கிறார்கள். இதுவரை அதர்வண வேதத்தை பிரயோகம் செய்து அப்படிப்பட்ட ஒரு யாகத்தை இந்த தரணியில் யாரும் செய்தது கிடையாது. அதை செய்வது அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் கெடுதலை தான் விளைவிக்கும். யாரை காப்பாற்ற இதை செய்கிறார்களோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது. அவரை காப்பாற்றவும் முடியாது, மேலும் இதை செய்தால் அதன் பலனாக நாட்டில் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்படும். அந்த குடும்பமும் மொத்தமாக அழிந்துவிடும். அதை தடுத்து நிறுத்த சொல். அகத்தியன் கூறியதாக சொல். இது பெரிய இடத்து விஷயம் ஆனதால், என் பெயரை சொல். உனக்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்."

அவர் சொன்ன பிரமுகரோ மிகப் பெரிய இடத்துக்காரர். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அகத்தியர் சொன்னதாக சொல்ல போய் கடைசியில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு. அகத்தியர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேறு சொல்லிவிட்டார். கண்டிப்பாக அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று தீர்மானித்து, மனதை ஒருநிலை படுத்தி, செய்தியை உரியவரிடம் சொல்ல தயாரானேன்.

அந்த காலங்களில், இன்று போல் தொலைபேசி தொடர்பு என்பது அத்தனை தூரம் விரிவடையவில்லை. பிரமுகரிடம் போன் இருந்தாலும், என்னிடம் கிடையாது. அப்படி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நம்பர் கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம். என்ன செய்வது என்று யோசித்து, தபால் தந்தி நிலையத்திற்கு சென்று அவர் பெயருக்கு "மின்னல் வேக தந்தி" கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஒரு நண்பரை அவசரமாக வரவழைத்து, விஷயத்தை சொல்லாமல், உடனடியாக தபால் தந்தி நிலையத்துக்கு வண்டியை ஓட்டச்சொன்னேன்.

போய் சேர்ந்ததும் மணி பதினொன்று முப்பது. பன்னிரண்டு மணிக்கு யாகம் தொடங்கிவிடும். அதற்கு முன் தகவல் அவர்களை போய் சேரவேண்டும். அவசராவசரமாக விண்ணப்பத்தை வாங்கி எழுதி கொடுத்து, பெறுனர் முகவரியை எழுதிய உடன், அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதை பார்த்து விட்டு அரண்டு போனார்.

"என்ன நீ! இந்த விஷயத்துக்காக எங்கே எந்த இடத்தில் கை வைக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா? அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதற்கும் ஒரு முறை யோசித்துக்கொள் என்றார்."

நான் தைரியமாக "இது அகத்தியர் சித்தரின் உத்தரவு. என்னை அவர் காப்பாற்றுவார். இதை அவர் உத்தரவின் படி தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்" என்று கூறி கை ஒப்பம் இட்டேன்.

அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்து, பெறுநரின் விலாசத்தை படித்த அந்த ஆபிசில் வேலை பார்த்த ஊழியர், என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது.

"சார்! தப்ப எடுத்துக்காதீங்க! இந்த தந்தி தேவையா!" என்றார்.

இப்படி கேட்ப்பார் என்று தெரிந்தே "தம்பி! கவலை படாதீங்க! அதை உரியவருக்கு உடனே அனுப்புங்க. என் விலாசத்தை முழுமையாக எழுதி இருக்கிறேன். ஏதாவது உங்களை விசாரித்தால், என் விலாசத்தை கொடுங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றேன்.

இருந்தாலும், அவர் அந்த விண்ணப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் கொண்டு காட்டி நான் சொன்னதை சொல்லவும், அந்த மேல் அதிகாரி என்னை ஆபீசிற்குள் அழைத்தார்.

உள்ளே சென்ற என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்த பின், "ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் தந்தியை அனுப்புகிறோம். நாளை ஏதாவது பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு. விசாரித்தால், உங்கள் விலாசத்தை கொடுத்துவிடுவோம்" என்றார்.

"தாராளமாக செய்யுங்கள். ஆனால், இந்த தந்தி மட்டும் இப்பொழுதே செல்லவேண்டும். அது போவதை பார்த்த பின் தான் நான் இங்கிருந்து போவேன்" என்றேன்.

மேல் அதிகாரியின் அனுமதியுடன், அந்த ஊழியர் என் கண் முன்னே அந்த தந்தியை உரியவருக்கு தட்டச்சு செய்தார். அது அந்த பக்கம் போய் சேர்ந்தது என்ற உறுதியும் எனக்கு தந்தார்.

நண்பரை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நன்றி சொல்லி, "நீ தைரியமாக போய் வா. உனக்கு ஒரு பிரச்சினையும் வராது. உன் பெயரை வெளியிடவே மாட்டேன்" என்று உறுதி கூறியவுடன் தான் அவர் புறப்பட்டு சென்றார்.

வீட்டிற்குள் சென்று பூசை அறையில் நின்று அகத்தியரை மானசீகமாக வேண்டிய பின் "உங்கள் வார்த்தைகள் யாரிடம் சென்று சேரவேண்டுமோ அவரிடம் இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும். பிரச்சினை வராமல் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிய பின் உறங்க சென்றேன்.

நள்ளிரவில், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை, யாரோ கதவை தட்டும் சத்தம் உணர்த்தியது. எழுந்து மணியை பார்க்க கடிகாரம் காலை நான்கு மணி என்று காட்டியது.

இந்த நேரத்தில் யார் வந்து கூப்பிடுகிறார்கள்? சரி! கதவை திறந்து பார்ப்போம் என்று தீர்மானித்து கதவின் அருகில் செல்லும் முன் இரண்டாவது முறை வாசல் கதவு தட்டப்பட்டது. வேகமாக சென்று திறந்து பார்க்க..........

வாசலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

வாசலில் வந்து நின்ற இருவரும் உயர்ந்த பதவியை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று பார்த்த போதே புரிந்தது. அவர்களின் மிடுக்கும், பார்வையும், அவர்கள் அணிந்துள்ள உடையில் குத்தப்பட்டிருக்கும் நட்ச்சத்திரங்களும் அனைத்தையும் தெரிவித்தது.

என் பெயரை குறிப்பிட்டு "எங்கே அவர்?" என்ற அதிகார தோரணையில் கேள்வி கேட்க தொடங்கினார் அவர்களில் ஒருவர்.

நான் தான் அவர்கள் கேட்கும் ஆள் என்று அறிமுகப்படுத்தி கொண்டவுடன்

"நீங்கள் தான் நேற்று இரவு இந்த தந்தியை கொடுத்ததா?" என்று கேட்டனர்.

"ஆம்" என்றதும்,

"யாருய்யா நீ? யாருக்கு தந்தி அடித்திருக்கிறாய் என்று தெரியுமா? என்ன தைரியம் இருந்தால் நேரடியாக இப்படி ஒரு தந்தியை அடித்திருப்பாய்? அது சரி! மிக ரகசியமாக வைக்கப்பட்டு நடத்த தீர்மானித்திருந்த அந்த யாகம் உனக்கு எப்படி தெரியும்? யாரெல்லாம் உன் கூட இருக்கா? எப்படி உள்ளே நுழைஞ்சு இந்த தகவலை பெற்றீர்கள்? என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்று அவர்களில் ஒருவர் பதில் சொல்ல விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

அவர்கள் கேள்விகளின் தாக்கத்தை பார்த்தபோது, என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் இருந்தது. அவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்க, அது வரை வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்த நான் "உள்ளே வாருங்களேன், அமர்ந்து பேசுவோமே" என்று அழைத்தேன்.

உள்ளே வந்தவர்கள், வீட்டை ஒரு நோட்டம் போட்டனர். எங்கும் சுவாமியின் படங்கள். என்ன நினைத்திருப்பார்களோ, கேள்வியின் தொனியை சற்று தளர்த்தினார்கள். நானோ தலையாய சித்தர் அகத்தியரிடம் "அய்யா! நீங்கள் சொன்ன படி தான் நடந்து கொண்டேன். எதிர் பார்த்தது போலவே, பிரச்சினை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறது. எப்படி எதை சொல்வது என்று கூறுங்கள்" என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.

"வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?" அவரில் ஒருவர்.

"நானும், மனைவியும் என் குழந்தைகளும்"

"எங்க வேலை பார்க்கறீங்க?"

பதில் சொல்லிவிட்டு " நீங்க என்ன தெரிஞ்சுக்க இத்தனை விசாரிப்புகள் பண்றீங்க?" என்றேன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ரகசியமாக வைக்கப்பட்டிருந்த யாகத்தை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? அது முதல்ல எங்களுக்கு தெரியவேண்டும். நீங்கள் இருப்பதோ இங்கு, யாகம் நடத்த நிச்சயித்த இடமோ கங்கை கரை. உங்க ஆளுங்க யாராவது அந்த கூட்டத்தில இருக்காங்களா? உண்மைய சொல்லுங்க" என்று அதிகார தோரணையில் கேட்கத்தொடங்கினார்.

அவர்கள் கேள்வி நியாயமானது. ரகசியமாக வைத்திருந்த தகவல், இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு ஊரில் எப்படி தெரியவந்திருக்கும்? யாகம் நடத்த தீர்மானித்திருப்பவரோ மிக சர்ச்சைக்குள்ளாகி உயர்ந்த பதவியில் இருப்பவர். அவரது பாதுகாப்பு வளையத்தில் எங்கேனும் ஒரு ஓட்டை விழுந்து விட்டதோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இருந்தாலும் நான் என்னை பற்றி கூறத் தொடங்கினேன்.

"அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை அவர் உத்தரவின் பேரில் தான் அறிவித்தேன். அதில் அகத்தியர் கூறியதெல்லாம் இன்றுவரை அப்படியே நடந்துள்ளது. பாரத கண்டத்துக்கு எப்பொழுதேனும் ஒரு தீங்கு வருமானால், அதற்கு முன்னரே அறிவிப்பு தந்து, பிரார்த்தனைகள் வழியும், யாகாதி கர்மங்கள் வழியும் பரிகாரம் பண்ணி வருகின்ற ஆபத்தின் பாதிப்பை இல்லாமல் செய்ய நினைக்கிற ஒரு சித்தர். என்னிடம் இருப்பது ஜீவ நாடி. அதில் எழுத்துக்கள் இருக்காது. கேட்கிற கேள்விக்கோ அல்லது தானாக உத்தரவின் பேரில் செய்தி வரும் போது ஸ்வர்ண நிறத்தில் எழுத்துக்கள் தோன்றும்."

"அப்படியா? அது இப்போ எங்க இருக்கு?"

"அய்யா! அது என் பூசை அறையில் தான் இருக்கிறது."

"பார்க்கவேண்டுமே"

"அய்யா பூசை அறைக்குள் வெளி ஆட்கள் யாரையும் வர விடுவதில்லை"

"அப்படியானால், நீங்கள் போய் எடுத்து வந்து காட்டுங்கள்."

"தாராளமாக! ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். நான் போய் குளித்து த்யானம், பூசை முடித்தபின் அவரது உத்தரவு இருந்தால் தான் வெளியே கொண்டு வரமுடியும். உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை என்றால், நானும் போய் வருகிறேன்."

"எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது?" அதில் ஒருவர் திடீரென்று கேட்டார்.

"நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு வேற வழி தெரியவில்லை. நான் ஒன்றும் ஓடி போய் விட போவதில்லை. எனக்கும் கடமைகள் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. நான் செய்வதில் தவறு இருந்தால் அந்த தந்தியில் அனுப்புனர் இடத்தில் பொய் விலாசம் இருந்திருக்கும். இல்லையே! என் முழு விலாசத்தை தானே கொடுத்திருந்தேன். ஏன்! நீங்கள் தபால் தந்தி அலுவலகத்தில் விசாரித்த போது இப்பொழுது நான் கூறியதை, அவர்கள் விசாரித்ததை தானே சொல்லி இருப்பார்கள். இரண்டுமே பொருந்தி இருக்குமே. மேலும் நீங்கள் வரும்போது நான் இங்கு தானே இருக்கிறேன். தலை மறைவாகவில்லையே. இதற்குமேல் உங்களுக்கு என்ன தெளிவு வேண்டும்?" என்றேன்.

ஒரு நிமிட அமைதி நிலவியது. நான் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப தொடங்கினார்கள். அந்த ஒரு நிமிட அமைதிக்குள் என் காதில் மட்டும் கேட்க்கும் படி வேறு ஒரு முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி, "அவர் பெயரை கூறி விசாரித்துக்கொள்ள சொல்!" என்றார் அகத்தியர்.

அந்த முக்கிய மனிதர், அகத்தியரின் பக்தர். இங்கு வரும்போதெல்லாம் நாடி பார்த்து தன் வாழ்வை செம்மை படுத்திக் கொண்டவர். அந்த முதல் முக்கிய பிரமுகருக்கு இந்த மனிதர் மிக நெருக்கம்.

"சரி! உங்களது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை", என்று கூறி அந்த மனிதரின் பெயரை கூறி, அவரிடம் என்னை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றேன்.

"அவர் அகத்தியரிடம் தான் நாடி படிக்கிறார். அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். முயற்சி செய்து பாருங்களேன்" என்றேன்.

அந்த மனிதரின் பெயரை கூறியவுடன், அவர்கள் இருவர் முகத்திலும் ஆச்சரியம். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

"நீங்கள் சொல்வதும் ரொம்ப பெரிய இடமாக இருக்கிறதே. சரி விசாரிக்கிறோம்" என்று கூறி ஒருவர் மட்டும் வெளியே சென்று போலீஸ் வண்டியில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை உபயோகித்து செய்தியை யாரிடமோ சொன்னார்.

"விசாரிக்க சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்வது மட்டும் தவறாக இருந்தால், உங்களை நாங்கள் எங்கள் இருப்பிடத்திருக்கு அழைத்து சென்று தனியாக கவனிக்க வேண்டி வரும். நினைவிருக்கட்டும்" என்றார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அதுவரை அவர்கள் நாடியை பற்றி தீர் விசாரித்தறிய தொடங்கினார்கள். எல்லா உண்மைகளையும் உரைக்க தொடங்கினேன். இந்த யாகத்தை ஏன் அகத்தியர் நடத்த கூடாது என்று உரைத்தார் என்பதையும் அவர்களிடம் உரைத்தேன். அவர்கள் முகம் வெளிறிவிட்டது.

பதினைந்து நிமிடம் கழிந்தவுடன், ஒருவருக்கு செய்தி வந்தது. செய்தியை வாங்கியவர், என் முன்னே அதை கூறினார்.

"இவரை தொந்தரவு செய்யாமல் திரும்பி செல்க. நான் முக்கிய பிரமுகரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று.

அவர்கள் இருவரும் என்னை ஒரு விதமாக பார்த்தனர்.

"நாங்கள் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும். எங்கள் வேலையை தான் செய்ய முயற்சி செய்தோம். உங்களிடமும், அகத்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி கிளம்ப தொடங்கினார்கள்.

"அய்யா ஒரு விஷயம்" என்றேன் நான்.

"சொல்லுங்கள்" என்றனர் ஒருவித பணிவுடன்.

"இந்த விஷயம் தயவு செய்து வெளியே தெரிய வேண்டாம். அது பின்னர் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தலையாய சித்தர் அகத்தியரின் வாக்கு. உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன்.

"நாங்கள் எங்கள் பணி நிமித்தமாக இதை உபயோகபடுத்தி தான் ஆகா வேண்டும். அது இன்றி இந்த விஷயம் வெளியே கசியாது. நாங்கள் வருகிறோம்" என்று கூறி இறங்கி சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு பின் அந்த முக்கிய மனிதர் என்னை பார்க்க வந்தார்.

உற்சாகமாக வரவேற்று முதலில் அவருக்கு நன்றியை கூறினேன்.

"நீங்கள் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால், நான் இன்று என்ன நிலைமையில் இருப்பேனோ தெரியாது. அன்று குறிப்பாக அகத்தியர் உங்கள் பெயரை கூறி விசாரிக்க சொல்ல சொன்னார். அதனால் தான் அந்த காலை வேளையிலும் உங்களை தொந்தரவு செய்திருப்பார்கள்" என்றேன்.

என் நன்றியை ஏற்றுக்கொண்டாலும், அவர் முகத்தில் சந்தோஷ களை காணப்படவில்லை. என்ன நடந்தது என்பதை தீர விசாரித்தார். அனைத்தையும் கூறினேன். பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவர், சற்று நேர அமைதிக்கு பின்,

"இனிமேல் அகத்தியர் சித்தர் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"எப்பொழுதுமே அவர் தானே நம்மை வழி நடத்துகிறார், அதில் என்ன சந்தேகம்?" என்றேன்.

"இல்லை. அந்த யாகம், தீர்மானித்தபடி அந்த நேரத்துக்கு நடத்தப்பட்டுவிட்டது." என்ற பேரிடியை தூக்கி போட்டார்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாயிற்று. என் வரையில் இடப்பட்ட பணியை செவ்வனவே செய்திருந்தாலும், அது எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் என்னுள் துளிர்த்தது. என் உள் உணர்வுகளை ஒதுக்கி தள்ளி விட்டு சற்று நேர அமைதிக்கு பின்

"உண்மையில் அன்று என்னவெல்லாம் நடந்தது என்று கூற முடியுமா?" என்றேன் அவரிடம்.

போலீஸ் வழி அவரிடம் அன்று விடியற் காலையில் செய்தி வந்து சேர்ந்ததும், என் பெயர் கூறி விசாரித்தவுடன், நான் பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, என்னை விடுவிக்க சொல்லி உத்தரவிட்டதும், பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அனைத்தையும் அறிந்தவுடன், அன்று காலையே கிளம்பி சென்று முக்கிய பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார். முக்கிய பிரமுகருக்கு நாடியில் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், வந்த தந்தியை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டபின், அந்த யாகத்தையும் தொடர்ந்து நடத்த சொல்லி இருக்கிறார்.

இவர் போய் "ரகசியமாக நடத்த நினைத்த யாகம், ஒரு நாடியில் வருகிறதென்றால், அந்த நாடி உண்மை என்று உணரவேண்டாமா? ஏன் யாகத்தை நடத்தினீர்கள்?" என்று கேட்டதற்கு,

"எத்தனையோ பேர்கள் இதுபோல் நடப்பது, நடக்க போவதை எல்லாம் சொல்கிறார்கள். எல்லோரையும் நம்புவதில்லை. எனக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை தான் நான் செய்தேன். யாகம் செய்தவர்கள் சொன்னதில் எனக்கு உடன்பாடிருந்ததால் என் குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு அதை செய்ய உத்தரவிட்டேன். உங்களுக்கு, அதில் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இனிமேல் இதை பற்றி பேசக்கூடாது" என்று உத்தரவு இட்டார் அந்த முக்கிய பிரமுகர்.

அகத்தியர் சொன்னால் அப்படியே நடக்கும் என்று எப்போதும் நம்புகிற இவருக்கு அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை. மௌனமாக ஆனால் இனி இந்த நாட்டில் என்னென்ன சேதங்கள் நிகழப் போகிறதோ என்கிற மனக்கவலையுடன் என்னை காண வந்துள்ளார்.

"அகத்தியர் நாடியில் என் மன கவலைக்கான பதிலை பெற்று தர முடியுமா?" என்று கேட்டார்.

"கேட்டு பார்க்கிறேன். ஆனால் என்ன பதில் வருகிறதோ அதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அகத்தியரை நிர்பந்த படுத்த முடியாது" என்றேன்.

தலையாய சித்தர் அகத்தியரை பிரார்த்தித்துவிட்டு, நாடியை படிக்க தொடங்கினேன்.

"சித்தர்கள் ஆகிய நாங்களெல்லாம், இந்த மனிதர்கள் திருந்தட்டுமே என்று தான் தவறு செய்ய புகுவோரை, முன்னரே எச்சரிக்கை செய்கிறோம். அதையும் மீறி, சிலவேளை விதி, தன் பலத்தை காட்டும். ஆறறிவு படைத்த மனிதருக்கு சிந்திக்கும் திறமையை கொடுத்த தெய்வம், ஒரு சிலருக்கு அதை இந்த மாதிரி நேரங்களில் அகம்பாவம் என்ற உணர்வை கொடுத்து, வேலை செய்ய விடுவதில்லை. இங்கு நடந்ததும் அதுதான். இனி நடக்க போவதை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறிவிட்டு,

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை சுட்டி காட்டி "இதை நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் ஜெபித்து வாருங்கள். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக கூறி நிறுத்திக் கொண்டார்.

இனி அவரிடமிருந்து இந்த விஷயத்தில் பதில் வரப்போவதில்லை என்று உணர்ந்து, வந்திருந்தவரும் விடை பெற்றார்.

பதினைந்து நாட்கள் சென்றது..............

ஒருநாள் மதியம் வானொலி வழியாக அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாருடைய ஆயுளுக்கு பங்கம் என்று யாகத்தை நடத்தினார்களோ, அவர் அன்று காலையில் நடந்த ஒரு கோர விபத்தில், கழுத்துக்கு கீழே அனைத்து பாகங்களும் சிதைந்து போன நிலையில் இறந்து போனார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நிறைய அப்பாவி மக்களும் அவருடன் போய் சேர்ந்தனர். இதன் தொடர்பாக எதிரொலித்த கலவரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் அதிகம் பேர்கள்.

அவரின் இழப்பில், அந்த முக்கிய பிரமுகர் நொறுங்கி போனார். அதர்வண வேதம் இத்தனை வேகமாக வேலை செய்யும் என்று, அன்று தான் நானும் உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அவர் இறந்த அதே மணி துளியில், அந்த முக்கிய பிரமுகரும், கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு நாடெங்கும், கலவரம், கொலை, கொள்ளி வைப்பு என்று ஜாதி மத, இன பேதமின்றி நடந்தது. அனைத்து இயக்கமும் நின்று போனது. குறிப்பிட்ட சமூகத்தினர் லட்ச்சக்கணக்கில் உயிர் இழந்தனர் அல்லது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து நின்றனர். சுமுகமான நிலை திரும்புவதற்கே பல நாட்களாயிற்று.

அகத்தியர் உத்தரவின் பேரில், எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை/நண்பர்களை அழைத்து சென்று சிவன் கோவிலில் "மோக்ஷ தீபம்" ஏற்றினேன். ஏற்றி முடித்ததும், போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

வீடு வந்து சேர்ந்து "எல்லாம் முடிந்துவிட்டதல்லவா?" என்ற கேள்வியுடன் அகத்தியர் நாடியை படிக்க "பொறுந்திருந்து பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதை படித்துவிட்டு நாடியை மூடிவைத்து, மிகுந்த அசதியுடன் அமர்ந்தேன். கூட வந்த நண்பர்கள் "என்ன செய்தி?" என்றிட. "ஒன்றுமில்லை! ரொம்ப அசதியாக இருக்கிறது" என்று கூறி மழுப்பினேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அந்த குடும்பத்தில் மிச்சம் இருந்த ஒருவரும் ஒருநாள் கொல்லப்பட்டார். அந்த வம்சத்தில் ஒருவரும் மிச்சம் இல்லாத படி விதிமகள் உத்தரவால் அழிக்கப்பட்டனர். இவரது மரணத்தினாலும் பல உயிர்கள் சேதமடைந்தது. பல மாதங்களுக்கு அதன் பின் விளைவுகள் நீடித்தது.

சித்தர்கள் பல விஷயங்களை மறைத்து வைத்துத் தான் நம்மிடம் சில விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர். கேள்வி கேட்க்கும் புத்தியுடைய நமக்கு, எதிர் கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, சரியான கேள்வியை கேட்கத் தெரிவதில்லை. அவர்கள் நம் எதிர்காலத்தை மிக துல்லியமாக கணிக்க தெரிந்தவர்கள். அதை புரிந்து கொண்டு வேட்கையை தணித்து, அவர்கள் காட்டும் வழியில் சென்றால், நல்ல படியாக கரை ஏறலாம்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பது நிதர்சன சத்தியம்.

..... தொகுத்தளித்தவர்: Karthikeyan

இவை அனைத்தும் வலைப்பூ "சித்தன் அருள்" பதிவுகள். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


No comments:

Post a Comment