Saturday, August 10, 2013

நல்ல துணையாவது நமசிவாயவே

...

எப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்போடு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து நல்லதுணையாக இருப்பவர் பெருமான் என்பதனை, “வஞ்சகம் அற்ற அடி வாழ்த்த வந்த கூற்று, அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே” என்று தமிழ்ஞானசம்பந்தர் குறிப்பிடுவார். வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபாடுகாட்டாது தன்னை அன்போடு வழிபடும் அன்பருக்கு அருள்புரிவார் பெருமான். அவர் வஞ்சகம் அற்றவர். அதனால் அவர் நமக்கு நல்ல துணையாவார் என்கின்றார் சம்பந்தர்.

தவிர நமக்குப் பிணியும் மூப்பும் ஏற்பட்ட காலத்து நமது கண்பார்வை குறைந்து, காது கேட்கும் வலிமையை இழந்து, நா சுவையை நுகர்ச்சி அற்று, உடல் உணர்வு இன்றிப் போகும். அப்பொழுதும் நமது அறிவும் அழியும், கபம் என்னும் சளி நம் மூச்சை அடைக்கும், இறப்பு அச்சம் நம் கண்ணில் தெரியும். அவ்வேளை நமக்குத் துணையாக மாந்தர் யாராலும் இருக்க இயலாது. உயிர் தடுமாறும் இந்நிலையில் அஞ்சவேண்டாம் என்று கூறி நம்மை அரவணைத்து நல்ல துணையாக திருவையாறில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மட்டும் தான் இருப்பார் என்பதனை, “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐமேலுந்தி, அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங்கோயில்…… திருவையாறே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார்.

நம் அனைவருக்கும் உண்மையான உறவு பெருமான் தான். பெறோர், கணவர், மனைவி, உற்றார் உறவினர் அனைவரும் இந்த உடம்பைச் சார்ந்த உறவுகள் தான். நம் உடல் இருக்கும் வரை இவர்கள் நம்மோடு வரலாம். இவ்வுறவு முறைகள் கூட பல்வேறு காரணம் கருதி சிதைவுற்றிருப்பதை அன்றாட வாழ்வில் காணலாம். ஆனால் என்றும் நம்மைப் பிரியாது நம்மோடு நமக்கு உற்ற நல் துணையாக இருப்பது பெருமான் தான் என்பதனை, “உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது, குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ” என்று அப்பரடிகள் தெளிவு படுத்துவார்.

“அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே” என்று பாரதியார் பாடுவார். நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். ஆந்தை அலறினாலும், குயில் கூவினாலும், பல்லி கத்தினாலும், பசு கதறினாலும், காக்கை கரைந்தாலும், பூனை குறுக்கே போனாலும், பிணம் எதிரே வந்தாலும், கழுகு பறந்தாலும் அதற்கொரு சகுணம் பார்த்து அஞ்சுவர். கனவில் பாம்பு வந்தாலும், மனிதர் வந்தாலும், பறவை வந்தாலும் தீங்கு வருமோ என்று அஞ்சுவர். நாம் பெருமானின் துணையை உடையவர். பெருமான் நமக்கு உற்ற நல் துணையாவார், அதனால் நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நம்மை அஞ்சுமாறு செய்யும் பொருளொன்றும் இல்லை என்பதனை, “உடையார் ஒருவர் தமர் நாம், அஞ்சுவது யாதொன்றும் இல்லை” என்று “சுண்ண வெண்சந்தனச் சாந்தும்” எனத் தொடங்கும் திருமுறைப்பாடலில் திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

பெருமானை வழிபட்டு அவர்பால் அன்பு கொண்டோமேயானால், பெருமான் நம் உள்ளத்திலே வந்து குடிகொள்வார். அதன் பின் என்றும் நம்மை விட்டு நீங்கா நல்ல துணையாக இருந்து நம்மைக் காப்பார் என்பது சுந்தர மூர்த்தி அடிகளின் திருவாக்கு. “நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன், வந்தாய்ப் போய் அறியாய்” என்பது இக்கருத்தினை விளக்கும் பாடலாகும்.

மணிவாசகப் பெருமானோ, பெருமான் எப்பொழுதும் நமக்கு நல்ல துணையாக இருக்கின்றார் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்று குறிப்பிடுவார். இதனால் நாம் கண் இமைக்கின்ற காலம் கூட நம்மை விட்டுப் பிரியாது நம்மைக் காக்கும் பெருமானே நமக்கு உற்ற நல்ல துணை என்பது தெளிவாகிறது.

அன்றாட வாழ்வில் நாள், கோள், எண், திசை, சகுணம், கண்டம், கனவு, தெய்வக்குற்றம் என்ற பல்வேறு கூறுகளை மனத்திற்கொண்டு எப்பொழுதும் அஞ்சி அஞ்சி வாழ்கின்றவர்கள் மேற்கூறியவற்றால் வரக்கூடிய எல்லா அனுபவங்களையும் பெருமானே தருவிக்கின்றார் என்ற தெளிவினைச் சிந்தனையில் கொண்டு அவற்றை வெல்வதற்கும் அவற்றை எதிர்நோக்குவதற்கும் நம்முடனே எப்பொழுதும் நல்ல துணையாக பெருமான் இருக்கின்றார் என்ற தெளிவினைப் பெற்றால் திருநாவுக்கரசு அடிகளின் வாக்கிற்கொப்ப இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று வாழ்வங்கு வாழலாம்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

Courtesy: http://saivanarpani.org/home/?p=392



No comments:

Post a Comment