Wednesday, August 21, 2013

ஸ்ரீ சரபேசர்

...

எங்கெல்லாம் சரபேசரின் சிலை உள்ளதோ, அங்கெல்லாம் ஸ்ரீ கவச ஜலூசர் என்னும் சித்தரின் ஆத்மா சிலை வடிக்கும் போதே உள்ளே புகுந்து விடுகிறது. தனி சிலையாக இருந்தாலும், தூணில் இருந்தாலும்....

அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் -
திருப்புவனம் சரபேசர் அவதார நோக்கம், அவரை வணங்குவதால் என்ன பலன்கள்.

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர்.

தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் தனிச் சன்னதி உள்ளது.

ஞாயிற்றுக் கிழமை, தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். ஞாயிற்று கிழமை பிரதோஷம் வந்தால் தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அபரிமிதமான பலன்கள் ஏற்படும்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரக சந்நிதி அருகில் சரபேசர் சிலை தூணில் உள்ளது. மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்.. சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.



No comments:

Post a Comment