Sunday, August 4, 2013

Prathosham - பிரதோஷம்

...

பிரதோஷம் என்பது என்ன?

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதியன்று துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவிக்க, அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க, சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்க மறுநாள் அதாவது பன்னிரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பிற காட்சிகளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள்.

மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான் அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது.

அது முதல் ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசியில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவபெருமான் நடனம் ஆடிய தினம் சனிக்கிழமையில் வந்திருந்த திரியோதசி தினம் என்பதினால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை தனி பிரதோஷம் என கருதி விஷேசமாக வழிபடுவார்கள்.


பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள் ...

அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக் கொண்டு பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

திங்கள் கிழமை :-
மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
செவ்வாய் கிழமை :-
உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.
புதன் கிழமை :-
புத்திர பாக்கியம் கிடைக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.
வியாழன் கிழமை :-
வித்தைகள் கை கூடும் (வித்யா பாரம் என்பது). சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைத்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
வெள்ளிக் கிழமை :-
பகை விலகும். குடும்ப பாசம் கூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.
சனிக் கிழமை :-
சனிப்பிரதோஷம் என்பது தனிப் பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தி அடையும் வழி கிடைக்கும்.
ஞாயிற்றுக் கிழமை :-
வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.


பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில் செய்யவேண்டிய பிரதர்ஷண முறை ...

எந்த ஸ்வாமி சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.

அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதை கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும்.

பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை வலம் வரும் காலத்தில் இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.

பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன?

ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும்.
அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும்.
ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.

இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும்.

இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும். இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.

Courtesy: A Blog-Post by Shri N.R.Jayaraman

...

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

...

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்

1. ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று

2. ஓம் ருத்ராய நம என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்

3. ஓம் மிருடாய நம என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்

4. ஓம் ஈசானாய நம நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்

5. ஓம் சம்பவே நம எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்6. ஓம் சர்வாய நம கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்

7. ஓம் ஸ்தாணவே நம பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்

8. ஓம் உக்ராய நம ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்

9. ஓம் பர்க்காய நம பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்

10. ஓம் பரமேஸ்வராய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

11. ஓம் மஹா தேவாய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

...

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன
1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம்.
தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

...

பத்து பிரதோஷமும் பலா பலன்களும் ...

நித்திய பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.

திவ்ய பிரதோஷம்.

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும். தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.

தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )

சனிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.

சப்தரிஷி பிரதோஷம்.

பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும். அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.

ஏகாட்ச்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.

அர்த்தநாரி பிரதோஷம்.

வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.

திரிகரண பிரதோஷம்.

வருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.

பிரம்ம பிரதோஷம்

பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.

ஆட்சரப பிரதோஷம்

வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர். பார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.

கந்த பிரதோஷம்.

சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.

சட்ஜ பிரபா பிரதோஷம்

தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.
வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.

நவகிரக பிரதோஷம்

வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது. அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.

துத்த பிரதோஷம்

இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.

...

नम॑स्ते अस्तु भगवन् विश्वेश्व॒राय॑ महादे॒वाय॑ त्र्यंब॒काय॑ त्रिपुरान्त॒काय॑ त्रिकाग्नि-का॒लाय॑ कालाग्निरु॒द्राय॑
नीलक॒ण्ठाय॑ म्रुत्युंज॒याय॑ सर्वेश्व॒राय॑ सदाशि॒वाय॑ श्रीमन्महादे॒वाय॒ नमः॑ ॥

ॐ नमः शिवाय शिवाय नमः ॐ

। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।।

...

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்

சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.

எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?

- என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்


( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். )










No comments:

Post a Comment