Friday, November 29, 2013

அம்பாளின் அநுக்கிரஹம்



நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களை உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது.

சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா. லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான். அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள் என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபதேசிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சத்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.

எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. அவள் அம்மா. அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும் என்பதற்கு மேலே ஒரு படி போய் – அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் – எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது. ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான் என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் – சிவ சிவ பச்யந்து ஸமம் என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடா வீக்ஷண்யம் பெற்றவவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன. சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.

அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆச்சாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் ஸெளந்தரிய லஹரியில் சொல்கிறார்.

பவானி உன்னுடைய அடிமை நான் என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். பவாநி த்வம், பவானி உன்னுடைய, (த்வம் என்றால் உன்) என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு பாவானித்வம் என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது பவானி என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்துவம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் பவானித்துவம் என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, பவானி என்றால் ஆகிவிடுகிறேன் என்று அர்த்தம். தீர்க்க சுமங்கலி பவ என்கிறோமே, இங்கே பவ என்றால் ஆவாய் என்று அர்த்தம். பவானி என்றால் ஆகிறேன். பவானித்வம் என்றால் நீயாவே நான் ஆகிவிடுகிறேன். எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், பவானி உன் (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, ஆமாமப்பா பவானித்வம்தான். அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். பவானித்வம் என்றால் பவானியின் தன்மை என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.

ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது ஸெளந்தரிய லஹரி சுவடிக்கட்டை நம் ஆச்சாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர். மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ஸெளந்தரிய லஹரி உருவாயிற்று.

அதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு. இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுதந்திரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆது ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான். நந்திகோசுவரர் அதை உறுவிக்கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன் என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்துவமும் அவளது உபாஸனையாளேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.

அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று மூக பஞ்ச சதீ. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ஆர்யா என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களைப் அழகைப் பற்றி நூறு சுலோகங்கள். ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள். அம்பாளின் கடா வீக்ஷண்யத்தைப் பற்றி நூறு மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றி நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு சகதம் என்று பெயர். தமிழில்கூட, தொண்டை மண்டல சதகம், அறப்பளீசுவர சதகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷமந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறு‘ம் சேர்ந்த நூலுக்கு மூக பஞ்ச சதீ என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருத்தம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ஆர்யா த்விசதி என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. லலிதா ரத்னம் என்றும் அதற்கும் இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். பட்டாரிகை எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே பட்டாரகர் என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன். இன்னொருத்தர் காளிதாஸர். மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.

அம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.

ஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.

அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். பவானி உன் தாஸன் நான் என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகியிருகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவளைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் பண்ணுகிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்றுவிடலாம்.

சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது. வித்யை, செல்வம் எல்லாம் பக்தினுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலே க்ஷணத்தில் மகா கவியானார்.

தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்கு வன்மையையும் வருஷித்தாள்.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரத்தையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக்கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு பேஷ் பேஷ் என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான். அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்யையைக் காட்டினேன்? என்று வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் வைத்து மூடி விடுகிறாளாம். விபஞ்ச்யயா காயந்தீ எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.

அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.

... Courtesy: blaufraustein.wordpress.com

No comments:

Post a Comment