Thursday, December 7, 2017

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸொரூப சிறப்புகள்





கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)

விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்.
.........

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மகேசுவர மூர்த்தம். அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்று. சனகாதி முனிவர்களுக்கு ஞானம் கற்பிக்க எடுத்த வடிவம். 

பொதுவாகவே, ஈசனுக்கு உரிய திசை தெற்கு. ஈச அம்சமான, தென் திசைப் பரமனை நாம் வடக்கு நோக்கி வழிபடுகிறோம். வடதிசை வாழவைக்கும் திசை.
த, க்ஷி, ண - என்பன மூன்று பீஜாக்ஷரங்கள். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம்.
தம், க்ஷிம், ணம் இந்த மூன்று அக்ஷரங்களைச் சொல்லும்போதே நமது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை அழிகின்றன. பீஜாக்ஷர மூர்த்தியே தக்ஷிணாமூர்த்தி. வேறு எந்த மூர்த்திக்கும் இல்லாத ஒரு சிறப்பு இது. 
வட ஆலமரம் ஞானத்தைக் குறிக்கின்றது. ஞானத்தின் நிழலில் அமர்கின்றவர். மரம் எப்படி எங்கெங்கும் கிளைகள் பரப்பி ஊன்றி வளர்கின்றதோ, எங்கும் ஆன்ம ஞானத்தை தக்ஷிணாமூர்த்தி ஊன்ற வைக்கின்றார். மோனத்தின் மூலம் ஞானத்தை உணர்த்திய ஞான குருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு.



"சிவரஹசியம்” பத்தாவது காண்டம், இரண்டாவது அத்தியாயத்தில் 'தக்ஷிணாமூர்த்தி ப்ராதுர் பாவம்' என்ற தலைப்பின் கீழ்வரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸொரூபம். 

பிரம்மா தன் படைப்பை துவங்கிய பொழுது, தன் மானச புத்திரர்களான சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் என்ற நால்வரையும் ஸ்ருஷ்டி கர்மத்தில் ஈடுபடும்படி கூறினார்.

ஆனால் அவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் மறுத்து விட்டார்கள்.

அவர்கள் தங்களுக்கு யாராவது ஞானோபதேசம் செய்வார்களா என்று தேவர்களிடமும், முனிவர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த நாரத முனி, “பிரம்மாவை விட சிறப்பாக யார் ஞானோபதேசம் செய்ய முடியும். அவரிடம் போய் பிரம்மோபதேசம் பெறுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

“அப்படியே செய்கிறோம் “ என்று கூறி நாலு பிரம்ம குமாரர்களும் தேவர்கள் புடை சூழ ஸத்யலோகத்திற்கு சென்றார்கள். ஸத்யலோகம் சென்ற அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே காத்திருந்தது. அங்கே பிரம்மாவின் முன்னால் அமர்ந்து ஸரஸ்வதி தேவி வீணை வாசித்து கொண்டிருந்தார்கள். பிரம்மா, ’ஆஹா, ஆஹா” என்று ஆனந்தத்துடன் தாளம் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்மணியின் இசையில் லயித்து போயிருக்கும் பிரம்மனால் தங்களுக்கு ஞானோபதேசம் அருள முடியாது  என்ற முடிவிற்கு வந்த சனக குமாரர்களை "வைகுண்டலோகம் போகலாம், அந்த சாக்ஷத் நாராயணனிடமே உபதேசம் பெறலாம்” என்று நாரதர் கூற சனக குமாராதிகள் வைகுண்டம் வந்தடைந்தார்கள். அங்கு இன்னும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

வைகுண்ட நாதரின் மாளிகைக்குள் எல்லோரும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாததால், எங்கும் எப்பொழுதும் செல்லக் கூடிய சலுகை பெற்றுள்ள நாரத முனி மட்டும் உள்ளே சென்றார். போன வேகத்திலேயே திரும்பியும் வந்து “இங்கே ஒன்றும் வேலைக்காகாது. ஸத்ய லோகத்திலாவது தேவி பிரம்மனின் முன்னால் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருந்தார். இங்கேயோ மஹாலக்ஷ்மித் தாயார் திருமாலின் பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த  நாராயணனா ஞனோபதேசம் செய்யப் போகிறார்.?” என்று சொல்லி, கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே மஹாதேவன் அர்த்த நாரீஸ்வரராக நிறைந்த சபையில் தாண்டவமாடிக் கொண்டிருந்தார். விஷ்ணு மத்தளம் போட்டுக்கொண்டிருந்தார், பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.

இவராலும் காரியம் ஆகாது என்று முடிவு கட்டி சனக, சனத் குமரர்கள் அங்கிருந்து போக ஆரம்பித்தார்கள்.

இதையெல்லாம் ஞான திருஷ்டியில் அறிந்த சிவ பெருமான், பார்வதி தேவியை அங்கேயே விட்டு விட்டு ஞான வேட்கையால் தவித்துக் கொண்டிருக்கும் அந்த குமாரர்களைத் தேடி போனார்.

சிவ பெருமான், கருணையால் உந்தப்பட்டு, ஒரு பதினாறு வயது பால யோகியாக மாறி சனக குமாரர்கள் போகிற வழியிலுள்ள மானசரோவர் ஏரியின் வட திசையிலுள்ள ஆல மரத்தினடியில் தக்ஷிணாமூர்த்தியாக தென் திசை நோக்கி அமர்ந்து கொண்டார்.

வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் மௌனமே காந்தக்கல் போல் சனகாதிகளை ஈர்த்தது. இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். 
சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். 

கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். 
ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர். அந்த மௌன நிலையிலேயே  அவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தியான சிவபெருமான் ஆத்ம சாக்ஷாத்காரம் அளித்தார். 

“சின் முத்திரை” என்றால் கட்டை விரலையும் ஆள்க்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம் உண்டாக்குவதாம். ஆள்க்காட்டி விரல் கட்டை விரலின் மத்தியை தொட வேண்டும். ஆட்காட்டி விரல் ‘அஹங்காரத்தையும்' கட்டை விரல் 'ஆன்மாவையும்' பிரிதிபலிக்கின்றன. இரண்டு விரல்களுக்குமான இடைவெளி 'மாயயை' குறிப்பிடுகிறது. அஹத்தை அழீத்து எப்பொழுது ஆன்மா பரமாத்மாவில் லயிக்கின்றதோ அப்பொழுது ஆன்மசக்ஷாத்காரம் ஏற்படுகிறது என்று பொருள். இந்த முத்திரை “தத்துவமசி” என்ற தத்துவத்தையும் குறிப்பிடுகிறது. சபரிமலையில் தர்ம சாஸ்தா தவக்கோலத்தில் சின் முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். 



ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் ஆள்காட்டிவிரல்  தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், ஆள்காட்டிவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.



ஸ்ரீதட்சிணாமூர்த்தி, இடையாற்றுமங்கலம், லால்குடி. 

மகாவில்வ இலைகளால் மாலை கட்டி இவருக்கு அணிவித்து துவாதசி வளர்பிறை திதிகளில் ஆராதித்து வந்தால் கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி, கூகூர், லால்குடி. 

பலரும் காசி, பூரி திருத்தலங்களுக்கு யாத்திரை போவதற்காக என்னதான் ஏற்பாடுகள் செய்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்தினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. இவ்வாறு தெய்வீக காரியங்களை உறுதியுடன் நிறைவேற்ற உதவும் மூர்த்தியே கூகூர் தட்சிணா மூர்த்தி ஆவார்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி. ஆதிகுடி சிவத்தலம், லால்குடி.

திருஅண்ணாமலையில் சிவபெருமானின் தூல தரிசனத்தை தரிசிக்கும் சக்தியை ஒருவர் பெற வேண்டுமானால் முதலில் அவர் ஆதிகுடியில் சனகாதி முனிவர்களின் தரிசனத்தைப் பெற்றாக வேண்டும். சனகாதி முனிவர்கள் இன்றும் மனித உருவில் தட்சிணா மூரத்தி ஈசனை வழிபடும் உத்தம தலமே ஆதிகுடியாகும்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருநெடுங்களம். 

சிரசாசனம் என்னும் யோகத்தை பிரம்மசாரிகள் மட்டுமே பயில வேண்டும் என்ற யோக நியதி உள்ளது. ஆனால், இம்முறையை அறியாமல் இல்லறத்தில் இருப்பவர்களும் சிரசாசனத்தை பயிலும்போது பலவிதமான உடல், மன துன்பங்கள் ஏற்படும். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பவரே திருநெடுங்கள யோக தட்சிணா மூர்த்தி ஆவார். முறையாக யோகாசனம், தியானம் அறியாமல் பயின்று அதனால் ஏற்படும் துன்பங்களுக்கு பிராயசித்தம் அளிப்பவரே இத்தலதட்சிணா மூர்த்தி ஆவார்.



ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி, லால்குடி, திருச்சி


ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் சுயம்பு லிங்க தத்துவத்தின் அடிப்படையில் எழுந்தருளியுள்ள அற்புத மூர்த்தியாவார். சிலருடைய குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகவே குழந்தைகள் மந்த புத்தியுடன் பிறக்கும் சூழ்நிலை அமைவதுண்டு. எத்தகைய மருத்துவ காரணங்களுக்கும் புலனாகாத இத்தகைய குறைபாடுகளை நீக்கக் கூடிய மூர்த்தி இவர் ஒருவரே ஆவார். குழநதைகள் தங்கள் கையால் சந்தனத்தை அரைத்து சிறு உருண்டைகளாக இந்த மூர்த்திக்கு அலங்கரிக்க அளிப்பதன் மூலம் தெளிவான மன வளர்ச்சியை கண் கூடாக காணலாம். தொடர்ந்த வழிபாடு அவசியம். சந்தனப் பொட்டுக்களின் மேல் ஜவ்வாது வைத்து அலங்கரித்தல் மேலும் சிறப்பாகும்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருப்பத்தூர் திருத்தலம்


ஒவ்வொரு கிரகத்தின் பாதத்திலும் மூன்று நட்சத்திரங்கள் என்ற கணக்கில் 27 நட்சத்திர தேவதைகளுமே ஒன்பது கிரகங்களில் பாத சஞ்சாரம் கொள்கின்றன. இவ்வாறு நட்சத்திர தேவதைகள் அனைத்தும் தினந்தோறும் வணங்கும் மூர்த்தியாக இத்தல தட்சிணா மூர்த்தி அருள்பாலிப்பதால் இத்தல தட்சிணா மூர்த்தி வழிபாடு கிரகங்களின் எத்தகைய பிரதிகூல தசா, புத்தி, அந்தரங்க துன்பங்களையும் களையக் கூடியதாக அமைந்துள்ளது கலியுக மக்களின் பெரும்பாக்கியமே. பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சித்தர்கள் அளித்துள்ள நட்சத்திர துதியை இத்தலத்தில் ஓதி பாதாம்பருப்பு கலந்த பால் தானம் அளித்து வந்தால் கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும்.


ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகங்கள்

॥ दक्षिणामूर्तिस्तोत्र ॥ Dakshinamurthy Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina.html?lang=sa

॥ श्रीदक्ष्निणामूर्तिस्तोत्रम् २ ॥. Dakshinamurthy Stotram 2
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina2.html?lang=sa

॥ दक्षिणामूर्तिस्तोत्रं सूतसंहिता ॥  Dakshinamurthy Stotra from Suta Samhita 
https://sanskritdocuments.org/doc_shiva/dakShiNAmUrtistotraSutasamhita.html?lang=sa

॥ श्रीदक्षिणामूर्ति नवरत्नमालिकास्तोत्रम् ॥ DakShinamurti Navaratnamalika Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/daksh9.html?lang=sa

॥ श्रीदक्षिणामूर्ति अष्टोत्तर शतनामस्तोत्र ॥ DakShinamurti aShTottara Shatanama Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina108str.html?lang=sa

श्रीदक्षिणामूर्ति पञ्चरत्नस्तोत्रम् .. DAKSHINAMURTI PANCHARATNASTOTRAM
http://stotram.lalitaalaalitah.com/2013/03/blog-pos-2.html


Those who do want to know in English, please click the under given Link

http://creative.sulekha.com/sri-dakshinamurthy-iconography-and-some-other-questions-part-one_451222_blog


.........
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்
.........

No comments:

Post a Comment