Sunday, February 11, 2018

மாந்துறையானும், ஈசம்பலத்தியும் .....


திருச்சியில் ஆலய தரிசனம் (3) : 26-1-2018 : வெள்ளிக்கிழமை

திருமாந்துறையான் ...

இன்றுடன் நான் ஜனனம் எடுத்து 65 வருஷங்கள் பூர்த்தியாகிறது. 
குலதெய்வம், காவல் தெய்வம், கிராம தேவதை தரிசனம்.

காலை ஏழு மணி அளவில் திருவானைக்கோவில் மாம்பழச்சாலை அருகில் இருக்கும் பாரியாள் தங்கை மாலதி இல்லத்திலிருந்து குமார் ஆட்டோவில் கிளம்பினோம். கொள்ளிடம் பாலம் கடந்து, டோல்கேட்டில் சிதம்பரம் செல்லும் ஹைவேயை பிடித்து, கிட்டத்தட்ட 12 KM பயணித்து மாந்துறை என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பினால் ரோட்டையொட்டியே ஆலயம். 



அருள்மிகு வாலாம்பிகை உடனுறை அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் அருள்புரியும் திருத்தலம். என் குலதெய்வ கோவில்.

தனிமண்டபத்தில் கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு இருக்கும் நந்தியம்பெருமானை வணங்கி, 3 நிலைகள் கொண்ட இராஜகோபுர தரிசனம் கண்டு, நிலையை கடந்து, மஹாமண்டபத்தில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டபாணியும் தரிசனம் செய்துவிட்டு, அர்தமண்டபத்திற்குள் நுழைந்து துவாரபாலகர்களை பார்த்துவிட்டு, கர்பகிரஹத்தில் கம்பீரமாக காட்சிகொடுக்கும் ஐந்தடி உயரமுள்ள ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் தரிசனம். கிழக்கு திசை நோக்கி சுயம்பு மூர்த்தியாக மிககம்பீரமாக எழுந்தருளிக்கிறார்.

ஈசனின் அர்தமண்டபத்தை விட்டு வெளியேவந்து, மஹாமண்டபத்திற்குள் நுழைந்ததும் இடதுபுறம் அன்னை வாலாம்பிகையின் சன்னிதி. கர்பகிரஹத்தில் அன்னை நான்கு கரங்களுடன் .. மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு .. நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 



என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் - ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் - திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.



வெளி பிரகாரத்தில் தென் மேற்கில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி பிரமாண்டமான விநாயகர் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் திருமேனிகள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றன. கோஷ்டத்தை ஒட்டி மிகமிக சிறிய சன்னதியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார். 

வெளி பிரகாரத்தில் ஸ்வாமி கர்பகிரஹத்திற்கு நேர் பின்புறம் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் மயில் வாகனத்தில் சாய்ந்தபடி வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி கஜலக்ஷ்மியும், பாலதண்டாயுதபாணி ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார்கள். 



வெளி பிரகாரத்தில் வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், அம்பாள் கர்பகிரஹத்திற்கு நேர் பின்புறம் ஸ்தலவிருக்ஷமாக வில்வமரமும் இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக மேற்கு நோக்கி மகாவிஷ்ணு, வடக்கு நோக்கி பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. மூன்றடி உயரமுள்ள அன்னை துர்கை மிக சாந்தமான முகத்துடன் அழகாக நிற்கிறாள்.

இராஜகோபுரத்தையொட்டி வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடுநாயகமாக ஆதித்தபகவான் தன் இரு தேவிகளுடன் மேற்கு நோக்கி இருக்க, மற்ற அனைத்து கிரகங்களும் அவரை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே சூரியன் தனியாகவும், பைரவப்பெருமானும் இருக்கிறார்கள்.

இராஜகோபுரம் வழியாக வெளியேவந்தால், சற்றே தள்ளி காவல் தெய்வமான கருப்பண்ண ஸ்வாமிக்கு தனியே கோயில். மூலவர் என சிலை ஏதும் இல்லாது, ஆலமரத்தின் கீழே ஒரு மிகப்பெரிய கருப்பு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்குதான் பூஜை புனஸ்காரம் செய்யப்படுகிறது. நிறைய சிறப்புகள் வாய்ந்த மிகுந்த சக்தியுடையவர் இந்த ஆலமரக்கருப்பர்.



என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். 

ஆட்டோவில் டோல்கேட் வரைவந்து சேலம் ரோட்டில் திரும்பி பிக்ஷண்டார்கோவில் அக்ராஹாரம் சென்றோம். 


ஈசம்பலத்தி அம்மன் ...



எங்களது கிராம தேவதையின் பெயர் ஈசம்பலம்.
வயலில் நடுவில் இருக்கும் தோப்புக்குள் குடிகொண்டு, வடக்கு திசையை நோக்கி கர்பகிரஹத்தில் அருள்பாலிக்கும் சப்த மாதாக்கள் தரிசனம்.
இரண்டு அடிக்கும் குறைவான உயரமுள்ள ஐந்து அடி நீளமுள்ள ஒரே கல்லில் இருக்கும் ஏழு அம்மன்கள். 
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீ.

மிகமிக சக்தி வாய்ந்த அம்மன். 
கர்பகிரஹத்தை விட்டு வெளியேவந்தால் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் அருள்மிகு கருப்பண்ணசாமி. ரொம்ப சக்தி வாய்ந்தவர்.



வெளி பிரகாரத்தில் குமுட்டி, துமுட்டி, காத்தவராயசாமி, ஆரியமாலை, ஓந்தாயீ அனைவரும் சிறிய தனிசன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.


ஆட்டோவில் இல்லம் திரும்பினோம். மாலாவின் இல்லத்தை ஒட்டியே இருக்கும் ஒரு அரசமரத்தின் கீழ் வீற்றுருக்கும் அருள்மிகு மாரியம்மனின் அபிஷேகமும் ஆராதனையும் கண்டு, அம்மனின் அனுகிரஹத்தை பெற்றோம்.

பிறந்தநாளைக்காக மாலா சேமியா பால்பாயாசமும், தேங்காசாதம் எலுமிச்சைசாதம் தயிர்சாதம் பண்ணியிருந்தாள். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் மணியும் மதியம் ஒன்று ஆகிவிட்டதால் ஒரு பிடி பிடிச்சாச்சு.

மூன்று மணி அளவில் குமார் ஆட்டோவில் திருச்சி ஜங்ஷன் வந்து, ஜன சதாப்தி ஏறி இரவு ஒன்பது மணி அளவில் கோவையில் உள்ள கோபால் அண்ணா இல்லம் வந்து அடைந்தோம். சுவாசினி மன்னி "பிடி கொழுக்கட்டை" பண்ணியிருந்தாள். கொட்சுடன் நன்கு மொக்கிவிட்டு உறக்கம்.


"ஆம்ரவனேஸ்வர மஹாத்ம்யம்" என்ற தலைப்பில் திருமாந்துறை ஸ்தலத்தை பற்றி எனது Blog Postல் விரிவாக எழுதியிருக்கிறேன். 
இந்த Linkல் படிக்கவும்.
https://koshasrini.blogspot.in/2017/11/blog-post_18.html

No comments:

Post a Comment