Tuesday, February 20, 2018

கல்யாணகாமாக்ஷி, மல்லிகார்ஜுனேஸ்வரர், இராஜதுர்காம்பிகை ...


மஹாசிவராத்ரி @ கோட்டைக்கோவில்


ஒவ்வொவுறு மஹாசிவராத்ரி அன்று, நானும் என் பார்யாளும் எங்கள் குலதெய்வம் கோவிலில் நடைபெறும் நாலு கால அபிஷேகம் ஆராதனைகளில் கலந்துகொள்வோம். இந்த மஹாசிவராத்ரி ( 13/2/2018 ) எங்களால் அங்கே போகமுடியாத ஒரு சூழ்நிலை இருந்ததால், தகடூர் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி கோவில் போகலாம் என்று தீர்மானித்தோம்


சுயம்பு மூர்த்தியாக புராதன கோவிலில் எழுந்து அருளியிருக்கும் சிவலிங்கத்திற்கு நடைபெறும் நாலுகால அபிஷேகங்களில் கலந்துகொள்வது மிகவும் விஷேஷம் என்று என் தகப்பனார் கூறுவார். எங்கள் குலதெய்வம் 2000 வருஷங்களுக்கு மேலான மிகமிக பழமையான சுயம்புலிங்கம். ஆகையால் இங்குதான் செல்வோம். தகடூர் கோவில் லிங்கமும் 1500 வருஷங்கள் பழமையான சுயம்புமூர்த்தி என்று அறிந்துகொண்டு, அங்கு செல்ல முடிவு எடுத்தோம்.


13ம் தேதி  வெலிங்டன் பார்க்கிலேருந்து காலை 5 மணிக்கு über பிடித்து சிட்டி ஸ்டேஷன் வந்தோம். 6:15 மணிக்கு Ernakulam Intercity. 8:45க்கு தர்மபுரி ஸ்டேஷனிலே இறங்கினோம். ஆனந்தவல்லியின் தகப்பனார் ஸ்டேஷன்க்கு வந்துருந்தார். அவர் இல்லத்திற்கு சென்றோம்.


ஆனந்தவல்லியின் தாயார், அத்தை, பெரியம்மா இவர்களுடன் சிறிதுநேரம் பேசிவிட்டு, தலைவாழை இலை போட்டு தடபுடல் உணவு அருந்தினோம். ரசகுல்லா, இரண்டுவகை கறி, கூட்டு, சாதம், மோர்க்கொழம்பு, ரசம், தயிர், பாயசம், ஐஸ்கிரீம். வயிறு ரொம்பி, கழுத்துக்கிட்ட வந்துடுத்து. சிவராத்திரிக்கு வந்துட்டு, மூக்குப்பிடிக்க சாப்பிட்டாச்சு.


அப்புறம் ஹோட்டல் அதியமான் பேலஸ்க்கு வந்து தங்கி ரெஸ்ட் எடுத்தோம். சிவதரிசனம் செய்யபோவதால், பெட்டில் படுக்காமல் சேர்லேயே உட்கார்ந்து ரெஸ்ட். மாலை நான்குமணிக்கு ஆனந்தவல்லி பெற்றோர்கள் வந்து, கோட்டைக்கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.


மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி ... 


இராஜகோபுரம் இங்கு இல்லை. பிரதானவாயில் வழியாக உள்ளே நுழைந்து, துவஜஸ்தம்பம் கண்டு, நந்திதேவர் தரிசனம்.






இன்று ப்ரதோஷம் கூட. நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை. பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு கிட்டத்தட்ட 1-1/2 மணி நேரம் எல்லாவற்றையும் தரிசித்தோம். எல்லாம் அவன் செயல். என்னுடைய 65 வருஷ வாழ்க்கையில், இதுதான் முதல்தடவை நந்திதேவர் அருகில் அமர்ந்து அபிஷேகமும் ஆராதனையும் தரிசிக்கும் பாக்கியம். பரமகுருவான நந்திதேவர் திருவடிகள் சரணம். நந்தியின் அருளாசியை பரிபூரணமாக பெற்று மகிழ்ச்சியாக இருந்தேன்.


நந்தியம்பெருமானை வணங்கி, மஹாமண்டபத்தில் நுழைவுவாயிலுக்கு இருபக்கமும் இருக்கும் துவாரபாலகர்களை பார்த்துவிட்டு, உள்ளே நுழைந்தால் அஷ்டதிக் பாலகர்களின் சிற்பவடிவங்கள் மிகமிக அழகாக நம்மளை கவருகிறது. அர்தமண்டபத்திற்குள் நுழைந்தால், அழகிய கலைநயத்துடன் செதுக்கப்பட்ட சுமார் மூன்று டன் எடையுள்ள நான்கு தூண்கள் இருக்கிறது. அதிசயத்தக்க ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இரண்டு தூண்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. தரைக்கும் தொங்கும் தூணுக்கும் இடைவெளியில் ஒரு 100 பக்க நோட்புக் எந்தவித தடங்கல் இல்லாமல் போய்வருகிறது. 1500 வருஷங்கள் ஆனாலும் தூண்கள் இன்றும் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பம் காலவரையற்றது


கர்பகிரஹத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்வாமி எழுந்து அருளியிருக்கும் திருக்காட்சி. 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி என்ற திருநாமத்துடன் விளங்கும் லிங்கம். இது சிவகாமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது. பாணலிங்கம் என்று போற்றப்படுகிறது.


நாலு தூண்களுக்கு நடுவில் மேலே விட்டத்தில் நவகிரஹ நாயகர்களின் சிற்பங்கள் மிகமிக அற்புதமான கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே நின்றுகொண்டு அப்பனை தரிசித்தால், கோள்களின் தாக்கம் கண்டிப்பாக குறைந்துவிடும்.


பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் இங்குவந்து தவம்செய்து மல்லிகைப்பூக்கள் கொண்டு இங்கே சுயம்பு மூர்த்தியாக எழுந்து அருளியுள்ள சிவலிங்கத்தை பூஜித்ததால், இவர் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி என்ற திருநாமம் கொண்டுள்ளார்.


மஹாவிஷ்ணுவின் அவதாரங்களான ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ இராமர், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்து ஸ்வாமியை பூஜித்தார்கள் என்று இங்குள்ள சிவாச்சாரியார்கள் சொல்லுகிறார்கள்.


மிக மிக சக்தி வாய்ந்த இத்தலத்து சிவபெருமானை வணங்கினால், வணங்குபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று ஆணித்தரமாக நம்பப்படுகிறது.  


கர்பகிரஹத்தின் நுழைவுவாயிலுக்கு இடப்புறம் ஸ்ரீ விநாயகப்பெருமானும், வடபுறம் ஸ்ரீ திருமுருக பெருமானும் அருள்பாலிக்கிறார்கள்


அர்த்தமண்டபத்தில் இரண்டு பக்கத்திலும் யானைகளுடன் கூடிய மஹாலக்ஷ்மி தாயாரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. யானைகளின் தும்பிக்கைகளில் இருந்து தாயாரின் மேல் விழும் நீர் தத்ரூபமாக இருக்கிறது.




விநாயகப்பெருமான் சுற்றுப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் ஸ்ரீ வலம்புரி செல்வகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


இஷ்டசித்தி ஷண்முகநாதர் என்ற திருநாமத்துடன் ஷண்முகர் தனிச்சன்னதியில் ஆறுமுகங்களுடன் மயில்வாகனத்தில் ஐயப்பஸ்வாமியை போல் கால்களை மடக்கி உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். அவரின் ஒரு பாதம் நாகத்தின் தலைமேல் உள்ளது. மயில் தன் அலகில் ஒரு நாகத்தை பிடித்துள்ளது.




சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரே நந்தி உள்ளது.


கல்யாணகாமாக்ஷி ...




அம்பாளின் சன்னதி ஸ்வாமியின் சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாணகாமாக்ஷி சிவசக்தி ஐக்ய சுருபமாக, பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு அருள்புரியும் அற்புத திருக்காட்சி.  


பதினெட்டு கல்யாணகுணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாக்ஷியின் அருளும் அனுகிரஹமும் நமக்கு கிடைக்கும் என்பதை உணர்த்ததான் 18 படிகள் ஏறி வரச்சொல்கிறாள். இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள் என்று ஒரு மூதாட்டி கூறினார்.




அம்பாளின் சன்னதி பதினெட்டு முனைகள் கொண்ட ஒரு பெரிய நக்ஷத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது அம்பாளின் 18 மாயசக்திகளை குறிக்கிறதுஇந்த 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்பவடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், தரைமட்டத்திலிரிந்து ஓரடி உயரமுள்ள சிற்பங்கள் அப்ப்ரதக்ஷிண நிலையில் வரிசையாக இருக்கிறது. இந்த அப்ப்ரதக்ஷிண தாத்பர்யம் ஏன் என்று புரியவில்லை


ப்ரதோஷகால பூஜை முடிந்தவுடன் அம்மையப்பன் உமாமஹேஸ்வரனாக ரிஷப வாகனத்தில் வலம்வருகையில் சிவசக்தி ஐக்ய நிலையை உணர்த்த, 18ம் படி அருகே அம்பாளின் சன்னதியை வலம்வந்து காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனம் காணக்கிடைக்காத அபூர்வமான தரிசனம். அம்மையப்பன் அருளால் இன்று அந்ததரிசனம் எங்களுக்கு கிடைத்தது. மூதாதையர்கள் செய்த பூர்வபுண்ய பலன்.


இராஜதுர்காம்பிகை ...


அம்பாள் கல்யாணகாமாக்ஷி கர்பகிரஹத்தின் அருகில் அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருள்தரும் அம்மன் சூலினி ராஜதுர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மஹிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மஹிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, ரத்னத்ரயம் (காரணம், காரணி, அதன் பலன் என மூன்று வகை) என்றவகையில் மூன்று வகை சூலங்களுடன், ஸம்ஹாரத்தில் அருள்புரியும் அம்பிகையின் அற்புத திருக்காட்சி.  


சக்கரபைரவர் ...


காலனையும் காலத்தையும் கட்டுப்படுத்தும் காலபைரவநாத ஸ்வாமி இங்கு மூணுக்கு மூணு அடி சக்கர வடிவில் யந்த்ரம் அமைக்கப்பட்டு, அதில் புடைப்பு (embossed) சிற்பமாக நாய் வாகனத்துடன் குபேர மூலையில் அம்பாள் சன்னதிக்கு அருகில் சுற்றுப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சூர்ய சந்திர அக்கினிஜுவாலையுடன் சக்கர பைரவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்


இங்குதான் சனீஸ்வரருக்கு காட்சி தந்து அவரை சூரியமண்டலத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவாக்கியதால், இங்கே சக்கர பைரவரை மனதார வழிபடுவர்களுக்கு ஜன்மச்சனி ஏழரைச்சனி அஷ்டமச்சனி மூலம் ஏற்படும் கஷ்டங்களை நீக்குகிறார். மேலும் பில்லி சூன்யம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அறவே நீக்குவதால், இங்கு யந்த்ர பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.


சக்கரபைரவர் சன்னதி அருகில் ஆஞ்சேநேயஸ்வாமி சிலையும், நாகர்கள் சிலைகளும் உள்ளது அதற்கு அப்புறம் நவகிரஹங்கள் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்


அம்பாள் சன்னதியின் 18 படிகளுக்கு முன் உள்ள மண்டபத்தின் பீடத்தில் பெரிய ஐந்துதலை நாகர் அமர்ந்துள்ளார்


இங்கேயுள்ள அம்பிகை சூலினியையும் சக்கரபைரவரையும், பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் வனவாசத்தின்போது வழிபட்டார் என்றும் மேலும் பேரரசன் அதியமான் நெடுமாறன் அஞ்சியும் வழிபட்டார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன


இந்த ஸ்தலம் பாணாசுரனால் ஸ்தாபிக்கட்டது என்று கூறுகிறார்கள். இராமாயண சம்பவங்களில் இந்த ஸ்தலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஸ்ரீ இராமர் சிறிதுகாலம் இங்கு தவம் செய்துள்ளார்.


இராவணேஸ்வரின் புதல்வன் இந்திரஜித் இங்கு யாகம் செய்து நிகும்பலை தேவியிடம் வரங்களை பெற்றான் என்று கூறப்படுகிறது.


இந்த ஸ்தலத்தில் மட்டும்தான் சரபேஸ்வரரின் பத்தினிகள் ப்ரத்யங்கிரா தேவியையும் சூலினி தேவியையும் ஒன்று சேர பூஜிக்கமுடியும்


புகழ் பெற்ற தமிழ் புலவர்கள் அவ்வை பிராட்டியும் அரிசில்கிழாரும், சைவமுனிகள் சம்பந்தரும் சுந்தரரும் இங்குவந்து அப்பனை புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.


The sculptures and the paintings in this ancient Temple is an architectural marvel. One has to spend enormous time to study and enjoy the every sculpture and painting. 


மஹாசிவராத்ரி அபிஷேகம் ...


இவ்வாலயத்தில் அம்பாளுக்கு தனிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மஹாசிவராத்தியின் முதல்கால அபிஷேகம் அம்பாளிடந்தான் ஆரம்பம். அம்பாளின் அனுகிரஹத்தால் கர்பகிரஹத்திற்கு அருகாமையிலேயே உட்கார்ந்து கொண்டு எல்லா அபிஷேகங்களையும், அதன்பின்னால் நடைபெற்ற ஆராதனைகளையும் பார்த்து புண்ணியம் பெற்றோம்


ஈசனும் அதேமாதிரி அனுக்கிரஹம் பண்ணிவிட்டார். கர்பகிரஹத்திற்கு அருகாமையிலேயே உட்கார்ந்து முதல்கால அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் பார்க்கும் புண்ணியம்

இதேமாதிரி நாலுகால அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் ஈசனின் கர்பகிரஹத்திற்கு அருகாமையிலேயே உட்கார்ந்து பார்க்கும் புண்ணியம் கிடைத்தது




இரண்டாம்கால பூஜை முடிந்தவுடன் அம்மையப்பன் ரிஷப வாகனத்தில் வலம்வருகையில் சிவசக்தி ஐக்ய நிலையை உணர்த்த, 18ம் படி அருகே அம்பாளின் சன்னதியை வலம்வந்த அம்மையப்பனின் அற்புத திருக்காட்சி.


என்னுடய குருநாதர் கட்டளைப்படி, மூன்றாம்கால அபிஷேகத்திற்கு தேன் நெய் வாங்கி கொடுப்போம். குலதெய்வம் கோவிலில் தனியாக இந்தத்தேன் நெய் அபிஷேகம் பண்ணுவார்கள். இந்தக்கோவிலில் தனித்தனியா கிடையாது, பக்தர்கள் கொடுக்கும் எல்லா தேனையும் ஒன்றுசேர்த்துதான் அபிஷேகம் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் பெங்களூரில் வாங்கிக்கொண்டு போன தேனையும் நெய்யையும் அவர்களிடம் கொடுத்துவிட்டோம். தேன் அபிஷேகம் வரும்போது நாங்கள் கொடுத்த தேன் நெய் பாட்டில்களை குருக்கள் எங்கள் கண்முன்னாடியே ஓப்பன் பண்ணி தனியாக அபிஷேகம் பண்ணினார். ஈசனின் அருளும் அனுகிரஹமும் இருந்ததாலதான் இது சாத்தியமாயிற்று


அங்கிங்கெனாதபடி எங்கும் எங்கெங்கும் வியாபித்திருக்கும் எம் பெருமானே, ஈசனே, எல்லாம் நீ போட்ட  பிச்சையே, எல்லாம் நினது திருவருளே.


நாலம்கால பூஜை முடியும்போது காலை ஆறு மணியாகிவிட்டது. கிட்டத்தட்ட 15 மணி நேரம் சிவன்கோவில் வாசம். சிவ ஒளி, சிவ நாமம், சிவ மந்திரம், சிவ அதிர்வு, சிவ தரிசனம்






எனக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு  முழுவதும் ஆலயத்தில்தான் இருந்தார்கள். முக்கால்வாசி பெண்கள். முப்பது பெண்மணிகள் கொண்ட ஒரு குழு நான்கு காலமும் ( 12 மணிநேரம் ) விடாமல் கோலாட்டத்துடன் சிவநாம சங்கீர்த்தனம் செய்தார்கள்

சிவநாம மந்திரங்களின் கணீர்கணீரென்ற ஒலிஉடலில், மனதில், உயிரில், சூட்சும தேகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் சுரீரென்று ஒலித்தது, இன்னும் ஒலிக்கிறது


ஒவ்வொவுறு காலம் முடிந்தவுடன் பிரசாதம் விநியோகித்தார்கள். நாலம்காலம் பிரசாதம் காலை ஆறு மணிக்கு சுடச்சுட வெண்பொங்கல். ஆஹா, ஜீவ அமிர்தம்.


இந்த 15 மணிநேரமும் ஆனந்தவல்லியின் தாயார் எங்கள் கூடவே இருந்தார்கள். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஆட்டோ பிடித்து நாங்கள் ஹோட்டல் அறைக்கு வந்தோம், அவர் அவருடைய இல்லத்திற்கு சென்றார்.





வருஷாவருஷம் மஹாசிவராத்திரிக்கு குலதெய்வக்கோவில் செல்லும் எங்களை, இந்த மஹாசிவராத்திரிக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும் இந்த பழமையான மிகசக்திவாய்ந்த ஆலயத்திற்கு வரவழைத்து நாலுகால அபிஷேகங்களையும் மிகதிவ்யமாக பார்க்கவைத்து எங்களுக்கு அனுக்கிரஹம் பண்ணியுள்ளான் இந்த ஈசன். அவன் அருளாலே அவனை தரிசித்த ஒரு மாபெரும் பாக்யம். அவன் போடும் கணக்கும் கோடும் ஒரு அலாதி, யாருக்கும் புரியாது


4 comments:

  1. இதை படித்தவுடன் மெய் சிலிர்த்துவிட்டது🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Super description mama
    How far is this look from dharmapuri?

    ReplyDelete
    Replies
    1. Thanks for your nice words .. Temple is in within Dharmapuri Town only

      Delete