Saturday, February 24, 2018

எனது மரபியம் ...


நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த, இன்றும் அரூபமாய் வாழ்ந்து கொண்டிருக்கும், சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்னுடைய குலகுரு


குலகுருவை என் வாழ்க்கையில் மூன்று தடவை தரிசித்து ஆசி பெற்றுள்ளேன். 1984ம் வருஷம் காஞ்சியில் தரிசனம் பண்ணி நமஸ்கரித்து எழுந்தபோது, "அபிவாதயே" சொல்லும்படி சைகை


அபிவாதயே  சாத்ய, ஸாங்க்ருத்ய, கௌரிவீத, த்ரயார்ஷேய, ப்ரவரான்வித, ஆபஸ்தம்ப ஸூத்ர:, ஸங்க்ருதி  கோத்ர:, யஜூர் ஸாகா அத்யாயி, ஸ்ரீநிவாஸ ஸர்மாநாம அஹம் அஸ்மிபோ:


தகப்பனார், தாத்தா, கொள்ளுத்தாத்தா பேர் ??


'ஸுப்ரமண்யம் கோதண்டராமன் ஸுப்ரமண்யம்


தாத்தாவின் தாத்தா பேர் ??


எனக்கு தெரியவில்லை. மௌனமாக இருந்துவிட்டேன்.




மாந்துறை ஸ்தலத்தில் அகஸ்தியர் அருளினால் மருதாந்த நாதன் என்ற அரசன் மாத்ருகமனம் செய்த பாபம் நீங்கி அவருடைய உத்தரவினால் கட்டப்பட்டது அஹம்ஹரா (மருவி ஆங்கரை ஆயிற்று. பாபத்தைப் போக்குவது என்று பொருள்) ஆங்கரை அக்ராஹாரம் முக்காவாசி ஸங்கிருதி கோத்ர மழநாடு ப்ரஹச்சர்ன ஸ்மார்த்தா. ஒருத்தருக்கு ஒருத்தர் தாயாதி. அங்கேபோய் அன்னதான வம்சம் பற்றி விஜாரி.


வருஷத்துக்கு ஒன்னு அல்லது ரெண்டு முறை கல்கி சதாசிவ அய்யர் - எம் எஸ் அம்மா ஆத்துக்கு போய்ட்டுவருவேன். அவர் என்னுடைய தாத்தா ( அம்மாவோட அப்பா ) வையச்சேரி ராமச்சந்திர அய்யரின் நெருங்கிய நண்பர். அவரும் ஆங்கரை ஸங்கிருதி மழநாடு ப்ரஹச்சர்னம். ஒவொவ்ரு தடவையும் "என் தாயாதி வந்துட்டான்" என சொல்லுவார்

அவர்கிட்ட மஹாபெரியவா சொன்ன 'அன்னதான வம்சம்' பற்றி கேட்டேன்.

"எங்க அம்மா அடிக்கடி 'அன்னதான சுப்பையர்' பற்றி சொல்லுவா. ஆங்கரைகாரா ரெண்டுபேர் மைலாப்பூரிலே இருக்கா. ரொம்ப வயசானவா. அவாளைப்போய் பாருன்னு" சொல்லி அட்ரஸ் கொடுத்தார்.


என்ன காரணம்ன்னு தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. ஆங்கரைக்கும் போகலை, மைலாப்பூருக்கும் போகலை. இதுபற்றி ஞாபகமே இல்லாம போயிடுத்து. பெரியவாளும் ஸித்தி ஆயிட்டா, சதாசிவஐயரும் காலமாயிட்டார்.


போனவாரம் ஒரு ஆங்கரை குடும்பத்தின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டேன். அங்கு வந்துருந்த மூதாட்டியாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அன்னதான சுப்பையர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.


அவர் மூலம் தெரிந்துகொண்டது .....


சுமார் 250 வருஷங்களுக்கு முன்னாடி ஆங்கரை அக்ராஹாரத்தில் மிகச்செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர் சுப்பையர். அவருக்கு ஆங்கரையை சுற்றியுள்ள 7 கிராமங்களில் இருக்கும் 2000 ஏக்கர் விளைநிலம் சொந்தம். அதில் விளையும் அரிசி காய் கனிகள் கொண்டு யாத்ரிகளுக்கு இரவுபகல் எந்நேரமும் அவரகள் பசியாற உணவு அளிப்பார். லால்குடி மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திருச்சி, ஸ்ரீரங்கம் செல்லும்போதும் திரும்பும்போதும் வழிபோக்கர்கள் அவர் இல்லத்தில் உணவு அருந்தி செல்வர். அவர் இல்லமும் ஒரே சமயத்தில் 50 நபர்கள் உணவுஅருந்துவதற்கு வசதியாக விசாலமாக இருக்கும். யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு அளித்ததால் அவரை எல்லோரும் "அன்னதான சுப்பையர்" என்று அழைக்கலாயினர்.


அவர் குடும்பம் மிகப்பெரியது. நிறைய சகோதர சகோதரிகள். அவருக்கும் சரி, அவருடைய சகோதரர்களுக்கும் சரி, நிறைய குழந்தைகள். எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். சகோதரிகளையும் பெண்குழந்தைகளையும் லால்குடி, அரியலூர், மண்ணச்சநல்லூர், மணக்கால், நன்னிலம், வரகூர், நீடாமங்கலம், வையச்சேரி கிராமங்களில் உள்ள நிலச்சுவான்தார்களுக்கு கட்டிக்கொடுத்து அவர்களும் நல்லநிலைமையில் வாழ்ந்துகொண்டுருந்தார்கள்.


ஈசன் அவரிடம் தன் திருவிளையாடலை துவங்கிவிட்டான் போலும். இரண்டு வருஷங்கள் வானம் பொய்த்துவிட்டது. நீர் வரத்து இல்லை. விளைச்சல் கிடையாது. இருந்தாலும் வீடு தேடி பசியோடு வரும் வழிபோக்கர்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்தவில்லை. கிடங்கில் அரிசியின் இருப்பு குறையத்தொடங்கியவுடன், சேமிப்பில் உள்ள பணத்தை கொடுத்து ஸ்ரீரெங்கத்திலும் திருச்சியிலும் அரிசி வாங்கி உணவு அளித்துக்கொண்டுருந்தார். விவசாயம் நின்றுவிட்டதால் அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் காலையிலும் மாலையிலும் உணவு அருந்த வரத்தொடங்கினர்


பணமும் குறையத்தொடங்கியவுடன், நிலங்களையும் வீட்டிலுள்ள நகைகளையும் விற்று அரிசி வாங்கி உணவு அளித்துக்கொண்டுருந்தார். நிறுத்தவில்லை. ஒரு காலகட்டத்தில் வசிக்கும் பிரமாண்டமான வீட்டை அடமானம் வைக்கும் நிலைமை வந்தபோதும் பசியோடு வருபவர்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்தவில்லை. அவர் காலம் வரை அன்னதான பிரபுவாகவே வாழ்ந்தார். அவர் காலத்திற்கு பின் உணவு அளிப்பது குறையத்தொடங்கி மெதுவாக நின்றுவிட்டது.


அவரின் புத்திரர்கள் பௌத்திரர்கள், அவரின் சகோதர்களின் புத்திரர்கள் பௌத்திரர்கள் பற்றி மூதாட்டியார் மூலம் தெரிந்துகொண்டு, ஒரு Excel Sheet போட்டு அலசியபோது என்னுடைய தாத்தாவின் தாத்தா பெயர் ஒரு கிளையில் இருந்தது. ஆனால் ஊர்ஜிதம் செய்ய தகுந்த ஆதாரங்கள் இல்லை. வைதியராமன் என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என் தகப்பனார் அவர் டையரியில் இந்தப்பெயரை எழுதியிருக்கிறார். இந்தப்பெயருக்கு லிங்க் கிடைத்தால் ஊர்ஜிதம் ஆகிவிடும்.


ஸ்ரீ மஹா பெரியவா எதற்கு அன்னதான வம்சம் பற்றி விஜாரிக்க சொன்னார் என்று புரியவில்லை. விஜாரித்ததில் "வைதியராமா" தவிர எல்லாம் சரியாக வருகிறது.


பெரியவாவிஜாரிஎன்று தான் சொன்னார். ‘தொடர்பு இருக்கா பாருன்னுசொல்லலை. இதுல ஏதோ ஒரு சூக்ஷமம் புதைஜெண்டுருக்கு.


காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா வார்த்தைகள் ஈஸ்வர கடாக்ஷம் பொருந்தியவை. குலகுருவும் குலதெய்வமும் தான் வழிகாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment